காலம் எப்போது வரும்…..?

காலம் எப்போது வரும்…..?

கருமேகக் கூட்டங்களை
இந்த மரம் வீசிக்கலைக்கிறது..!
மரத்தின் ஓரக்கிளைகளில்

ஒடுங்கி ஒதுங்கிக்கொண்டிருக்கும்
பறவைக் குஞ்சுகளை உதிர்;கின்ற இலைகள்
போர்த்திக் கொள்கின்றன….
உறைவிடம் தேடி ஓடிவரும் பறவைகளுக்கும்
அடைக்கலம் கொடுக்கிறது.
மின்னல் வெட்டுகிறது
இடியிடிக்கிறது
பூமியின் ஆச்சரியக் குறியாய்
இந்த தனிமரம் மட்டும் இன்னல்களைத்
தாங்கி நிற்கிறது.
மழை பெய்து
குஞ்சுகள் சாகக்கூடும் என்பதால்-தன்
வயிற்றின் விழுப்புண்களைக் குடைந்து
பறவைகள் பதுங்கிக்கொள்ள
பக்குவம் தேடி வைத்திருக்கிறது
வர்ணபகவான் வக்கிரத்தோடு
மூசுகிறான் பலமாக………..
கோவர்த்தன மலைகூட
நெற்றிக்கண்ணைத் திறக்க மறுக்கிறது
இலைகள் , கிளைகள்
பூக்கள், பிஞ்சுகள்
காய்கனிகள்; எல்லாமே – போராடி
மரணத்துக்குள் உதிர்ந்து விழுகின்றன
மரத்தின் வேர்கள்
வலிதாங்காமல் பூமிக்கடியில்
முனகி அழுகிறது..!
பறவைக் குஞ்சு குருமன்கள்
ஓன்றிரண்டு மடிய
மற்றையவை எல்லாம் – வேறு
புகலிடம் தேடிப் பறக்கின்றன……..
நீண்டவருடங்களின் பின்
பாலைவனமாகிப்போன தேசத்தில்
பட்டமரமாய்
வாழ்வு மறுதலித்து
உதிரங்களை இழந்து
நிர்வாணமாகி நிற்கிறது
இந்தப் பெரு விருட்சம்…!
இப்போதெல்லாம் அவ்விடத்தில்
பயங்கரப் பேய்பிடித்தாற் போல
வெளவால்கள் மட்டும்
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்க
கொடிய வல்லூறுகள்
வலயம் போட்டு சுற்றிச் சுற்றி அலறுகின்றன.
தனது ஆதிக்க வலயமென
விழியில் வெறிகொண்டு நிற்கின்றன
சொந்தக் கூடுகளுக்கு
திரும்ப முடியாமல்
வறண்டுபோன வாழ்க்கையில்
மீண்டும் மீண்டும் பிறாண்டி
புழுப்பிடிக்கும் முயற்சியில்
பறவைகள் தோற்றுக்கொண்டிருக்கின்றன……
ஐந்து தடவை
குரல் கொடுத்து முடிந்தாயிற்று
இப்போது புதிய இறகுகள் முளைக்க
புதிய பரிமாணத்தோடு
சொந்தக் கூடு திரும்ப – சிறகுகளை
விரித்துக்காட்டுகிறது பறவைகள்
இன்னும் தடையகலவில்லை..!
வானத்தில்
தடையின்றிப் பறக்கவும்
மண்ணில்
காலாற நடந்து கதைபேசவும்
கோவைப் பழம்
பறித்துண்டு விளையாடவும்
சொந்தக் கூடுகளில்
சிற்றின்பக் கலவிகொண்டு
உறவாடி மகிழவும்
காலம் எப்போது வரும்…?

//