வித்யாசமான கவிதை

அறிவுறுத்திய மாந்தரை
காக்க வேண்டி…
அத்தோடு
அவர்தம் ஆநிரை காக்க வேண்டி…

இறையெனும் ஒரு தலைவன்
செய்த செயலே..
இம்மலை பெயர்த்துக் காத்தல்…

மழைதன்னிலிருந்து
மற்றோரைக் காக்க
கோவர்த்தன
மலையைக் குடையென
கொண்ட
இறை செய்த செயல்
சரியா தவறா…?????

இந்திரனோடு பிணக்கு எனில்
வருணனோடு வழக்கு எனில்
தனிப்பட்ட முறையில்
தீர்த்திருக்கலாமே….

ஏன்
இன்றைய அரசியல்வாதிகளைப் போன்று
மக்களை கேடயமாக்கி
மக்களை பாதிப்புக்குள்ளாக்கி
மக்களாலேயே அவர் செயலை
மதிப்புக்குள்ளாக்க வேண்டும்…??

இங்கு தெரியும் ஒரு தகவல்
“மக்களொடு மக்களாய்ப்
பிறந்தேன் யான்….
மக்கள் படும் அவதியினை
உணர்ந்தேன் நான்
அத்தோடே..
மக்களுக்காய் ஒரு நீதியினை
வகுத்தேன் நான்”
எனும் சிவப்பின் கொள்கையிது…

தனியொரு கோவில் கொண்டு
தனித்த சில சடங்குகள் கொண்டு
தான் வகுத்த சிலவற்றால்
தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு
வாளாவிருக்கவில்லை
வானளந்த மாயவன் கால்….

வானளந்த காலால்
காடளந்து
காடளந்த காலாலே
சில
காவுகள் கொண்டு
பக்தர்தம்
மனமளக்க வந்ததே
அவனின் காலும்
அவன் ஆநிரை காவலில்
அவனோடு அணி வகுத்த கோலும்..

இறையின் கடமை
கொலுவிருப்பது மட்டுமல்ல
தேவையெனில்
மாடு மேய்க்கும் கோல்
பிடிப்பதும்தான்
என
சொன்னாமல் சொன்ன
தத்துவமே இது….

தர்மம் என்பது
தகாதது செய்யாதிருத்தல் மட்டுமல்ல
தகாது செய்தாரை
தர்மம் தாண்டியேனும்
தண்டிப்பதும் தான்
என
போதனை கொடுத்த
காட்சி இது……

மறவாதிருங்கள்…
இறையின் மாட்சியினை..
மறந்தும்
நினையாதிருங்கள்..
இறை தந்த காட்சியினை….

உங்கள் மனமே
இறையாகும் போது…
உங்கள் துயரங்களே
இந்திரனும் வருணனும் ஆகின்றன…
நம்பிக்கையெனும்
கோவர்த்தன கிரியால்,…
யாவையும் தடுக்கலாம்…
உங்கள் மனமே
இறையாகும் போது…………………….