வன்னிப் பெண்கள்

 

அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை எப்படி அறுதியிட்டுச் சொல்லமுடியாதோ அதேபோன்று அப்படத்தான் நடந்தது என்பதையும் ஒரு போதும் நிரூபிக்க முடியாது.

போர் முடிந்து மூன

்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வன்னியில் அடக்கு முறைகளுக்கு குறைபாடில்லாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் வெளிப்படுகள் ஒருபுறம் இருக்க ஓர் இனத்தின் அடையாளங்களையும் இருப்பையும் இல்லாதொழிக்கும் முயற்சிகள் முழு மூச்சில் நடைபெறுகின்றன.

போரின் போது பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அகதி முகாம்களில் வாழ்ந்து தற்போது படிப்படியாக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதர உதவிகள் பொருத்தமான வகையில் வழங்கப்படாத நிலையில் புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்கி முன்னெடுப்பதற்கு பெரும் நெருக்கடியாகவே உள்ளது.

இவ்வாறான மக்கள் பிரச்சினைகள் பொதுப்பட்டவையாக அடிக்கடி பேசப்படுபவையாக மாறியுள்ள நிலையில் மக்களுக்கான மேலதிக நெருக்கடிகளும் கெடுபிடிகளும் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைக்கான போராட்டத்துடன் எதிர்கால சந்ததியின் நிலைத்திருப்பையும் மாற்றியமைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

வன்னிப் பெண்கள்

போரால் பாதிக்கப்பட்ட சமுகத்தின் மத்தியில் பெண்களின் பாத்திரம் கேவலமாக்கப்படும் நிலை தோற்றுவிக்கபடுகின்றது. அல்லது அவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக வன்னியில் போரின் போது கணவனை இழந்த பெண்களின் நிலையை மிக கீழ்மைப்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க இராணுவ பிரசன்னங்களின் வலுவும் இவர்களைக் குறி வைக்கப்படுவதை உணர முடிகிறது. மிக அண்மைய சம்பவமாக இருக்கக் கூடிய முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை சம்பவம் இந்த அவலத்தின் ஒரு எடுத்துக்காட்டு.
இது போன்ற வெளிச்சத்து வராத சம்பவங்கள் எத்தனையோ மூடி மறைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது கவலை கொள்ளத்தக்கதாகும்.

முன்னாள் பெண் புலிகள்

அண்மையில் இந்திய சஞ்சிகை ஒன்றில் வெளியாகி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய “வித்தியாராணி”யின் கதை ஒரு சமூகத்தை முற்று முழுதாக கீழ்மைப்படுத்துவதான விமர்சனத்தை கிளபியது வயிற்றுப்பிழைப்புக்காக ஈழப் பெண்கள் (போரால் பாதிக்கப்பட்ட) தமது உடல்களை விற்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதே அந்த பேட்டியாளரதும் வெளியீட்டாளரதும் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை எப்படி அறுதியிட்டுச் சொல்லமுடியாதோ அதேபோன்று அப்படத்தான் நடந்தது என்பதையும் ஒரு போதும் நிரூபிக்க முடியாது.
வித்தியாராணி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் விதம் வெறுமையில் பூசி மெழுகப்பட்டது. ஒரு சில உண்மைகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது.

இது ஒட்டு மொத்த பெண்களுக்கான அல்லது ஓர் இனத்தின் ஒழுக்க உடமைக்கு அப்பாற்பட்டது. 1985 ஆவணி 18 ஆம் திகதி பெண்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சிப் பாசறையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றைக் கூட நினைவில் வைத்திருக்கும் தீவிர விடுதலைப் பற்றாளரான வித்தியாராணி வாள்வின் இருப்புக்காக வெகு சுலபத்தில் விலை போனார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

உண்மையில் தடுப்பு முகாம்களில் திட்டமிட்ட பொது இடங்கள் தமிழ்ப்பெண்கள் மீது திணிக்கப்பட்டமை தவிர்க்க முடியாதது. அந்தக் குழப்பத்தில் இருந்து மீள முடியாத சிலர் இன்னும் இருக்கக் கூடும். வித்தியாராணி, தன்னை பகல் இரவு பாராது பலர் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று கூறியிருந்தார் என்று விகடன் செவ்வி கூறுகிறது.
போராளிகளில் சிலர் அப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தமை ஆவணங்கள் ஆக்கப்பட்டுள்ளது.

அதற்காக அவர்களுக்கு வேறு கதியில்லை. அதே தொழிலைத்ததான் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற விதத்தில் ஒரு சமூகப் புரிந்து கொள்ளலை ஏற்படுத்த எவரோ ஒருவர் தீட்டிய திட்டமாக வித்தியாராணி இருக்கமுடியாது என்று நிராகரித்துவிட முடியாது.ஏனெனில் விலைபோகத் தயாரில்லை என்பதை நிரூபிக்க இங்கு பல கதைகள் உண்டு.

கடந்த 2 ஆம் திகதி இரவு முல்லைத்தீவு அம்பலவன் பொக்களைப் பகுதியில் ஆலடிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருக்கும் இராணுவ முகாமைச் சேர்ந்த படைச்சிப்பாய் ஒருவர் அந்தப் பகுதியில் தனித்து வாழ்ந்த பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்டிருக்கிறார்.

அதிகாலை 3.30 மணியளவில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நுழைந்த சிப்பாய்க்கு அந்த பெண்ணின் வலிமை புரிந்திருக்கவில்லை.ஆள் அரவம் அறிந்து விழித்துக் கொண்ட பெண், சிப்பாயின் செயலை முறியடிக்கத் துணிந்திருந்தாள். சிப்பாய் அணிந்து வந்த நீளக் காற்சட்டையைப் பற்றிப் பிடித்துக் கொண்ட அவள் அயலவரது உதவியை நாடி கூக்குரலிட்டாள்.

ஊரும் விழித்துக் கொண்டதால் சிப்பாய் ஓடி மறைந்த இடம் வெளிச்சத்துக்கு வந்தது. மறுநாள் மக்கள் அணிதிரண்டு தமது எதிர்ப்பை தெரிவித்ததால் அந்தச் சிப்பாய் அடையாளப்படுத்தப்பட்டார். அந்தப் பெண்ணும் வறுமையில்தான் வாழ்கிறார். வெறும் தகரக் குடில்தான் அவரது வீடும். படிக்கும் பிள்ளை இருக்கிறது. ஆனாலும் வந்தவனை உதைத்து வெளித் தள்ளி தனது மானம் காக்கும் துணிவும் உரமும் இருக்கிறது.

சமரசங்களுக்கு தயாரில்லாத அந்தப் பெண்ணையும் போல் பலர் இன்னமும் இருக்கின்றார்கள். ஆனால் வித்தியாராணிகள் மீதே கவனம் குவிகிறது. தமது சுகவாழ்வுக்காக தம்மை விலை பேசவும் விரும்பவில்லை, வீணாக வரும் நெருக்கடிகளுக்கும் துணை போகவுமில்லை எனும் பெண்களே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பதிவுகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக ஒரு சிலரது குறுநிலைச் சிந்தனைகளை வெளிப்படுத்தி ஒட்டு மொத்தமான பார்வை ஒன்றை ஈழப்பெண்கள் மீது திருப்பி விடுவதற்கு எடுக்கப்படும் முயற்சி தவறானது. வித்தியராணி போன்றவர்கள் தமிழ்த்தலைவர்கள் முன் தோன்றி தமது பிரச்சினையை முழுமையாக வெளிப்படுத்தாது தமது சிந்தனைகளை தவறான நோக்கத்துக்காக பயன்படுத்துவது போல எல்லாப் பெண்களும் இல்லை.

இழந்தவைக்கு மத்தியிலும் இன்னும் எமக்கான வாழ்வும் அதற்கான உரிமைகளும் இருக்கின்றன என்பதை ஒவ்வொருதரும் எண்ணிக் கொள்ள வேண்டும். வன்னியில் வலிந்து ஏற்படுத்தக் கூடிய பெண்கள் மீதான வன்முறைகள் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் அரசியல்தலைவர்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது வாழ்வாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளை அதிவேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஈழப்பெண்கள் மீதான கவனங்கள் தவறான வழியில் திசை திருப்பப்படுவதை தடுத்து நிறுத்தி தமிழினத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் பலரது எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இழந்தவற்றை ஈடுசெய்ய முடியாவிடினும் இருப்பவற்றைக் கொண்டு எதிர்காலத்தை வளம்படுத்த பாதிக்கப்பட்ட சமூகம் முற்பட வேண்டும்.

அவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறைகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் துணை போகாது எதிர்கால சந்ததியைப் பாதுகாக்கும் கடமை எல்லோரது கைகளிலும் உள்ளது என்பதை பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் முதல் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்கள் விலை பேச முடியாதவர்கள். விடுதலைக்காகப் போராடிய வீர வராலாறுகளைக் கொண்டவர்கள். இன அழிப்பின் சதிவலையில் சிக்க வைக்கப்பட்டு இன்று சிதறடிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களது எந்தக் கட்டமைப்பும் சிதைந்து போகவில்லை. அது என்றும் எங்கும் நிலைத்திருக்கும்.

 

“நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்”
//