தொல்லை தீர்க்கலாம்

305957_344128669019591_1069969744_n

பாலும் தேனும் புளித்த காடி
பாடுது பார் வணம் பாடி
சோலையிலே நீயும் நானும் ஆடி-நாம்
தொல்லையெல்லாம் தீர்த்திடலாம் வாடி!

ஆலமரம் கூடாரம்
அல்லிப்பூங் குளத்தோரம்
மாலைக்காலம் நமை அழைக்கும் நேரம் – இந்த
மாப்பிள்ளைக்கு நீதாண்டி ஆதாரம்!

காதலுக்கு மஞ்சல் சிட்டு
காத்திருக்கும் வேலை விட்டு – அடி
மாதரசே பேசக் கூச்சப்பட்டு – நீ
வருத்தமா கீழே தலை நட்டு?

போதாதா நான் உனக்கு
பொன்தாண்டி நீ எனக்கு
காதோடு சொல்வாயுன் எண்ணம் – நீ
கட்டுப்பட்டால் இன்பவாழ்வு திண்ணம்!

பூமணக்கும் உன் கொண்டை
பொன் குலுங்கும் கால் தண்டை
தீமை என்ன கண்டாய் என்னண்டை- வாய்
திறந்திட்டால் கெட்டாபோகும் தொண்டை!

மாமிக்குன் மேல் ஆசையுண்டு
மகனுக்கும் நீ கற்கண்டு
நீ மேலும் மேலும் துவண்டு-போய்
நிற்பதென்ன சொல் ஆசை கொண்டு!

பாவேந்தன் பாரதிதாசன்.