காவிரி…

228380_388512431223707_1053560104_n

காவிரி…

கைகொடுத்தது உச்ச நீதிமன்றம். ஆனால்?
கருகிக் கிடக்கும் பயிர்களைக் காக்க, காவிரியில் தண்ணீர் வருமா என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், காவிரி

டெல்டா மாவட்ட விவசாயிகள்.

கடனை வாங்கி, கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த பயிர்களைக் காக்க தண்ணீர் இல்லாததால், விவசாய தற்கொலைகளும் ஆரம்பமாகிவிட்டன நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூரில் ராஜாங்கம் என்கிற விவசாயியும்… கீழையூர் வட்டத்தில் செல்வராஜ் என்ற விவசாயியும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘காவிரியில், உடனடியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். வரும் திங்கள் கிழமை (டிசம்பர் 10) வரை இப்படி திறந்துவிட வேண்டும்’ என்று அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், கர்நாடக அரசுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று (டிசம்பர் 5) விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், ‘காவிரி கண்காணிப்புக் குழுவை வெள்ளிக்கிழமையன்று கூட்டி, தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி எத்தனை ஏக்கரில் பயிராகி உள்ளது, எவ்வளவு நீர் தேவை என்பதையெல்லாம் ஆராய்ந்து, டிசம்பர் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் உத்தரவிட்டுள்ளது.

‘இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீர் குறித்து, இறுதி முடிவு செய்யப்படும்’ எனக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு பல காலம் ஆகியும், இதுவரை அதை ஏன் அரசிதழில் வெளியிடவில்லை?’ என்றும் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தாலும், இது விவசாயிகளுக்கு எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்று தெரியவில்லை. இந்தத் தண்ணீர், காவிரி டெல்டாவை அடையவே நான்கு நாட்களுக்கு மேலாகிவிடும். ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே, உச்ச நீதிமன்றத்தில் ஓயாமல் தமிழகத்தின் சார்பில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஜீவாதாரப் பிரச்னையான இந்த விஷயத்தையும் வழக்கமான அரசியல் வழக்குகள் போலத்தான் எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். அப்போதே அதிரடியாக இந்த விஷயத்தில் தன் கவனத்தை உச்ச நீதிமன்றம் திருப்பியிருந்தால், தமிழக விவசாயிகளை ஓரளவு காப்பாற்றுவதாக அது அமைந்திருக்கும். தற்போது, ‘காலம் கடந்த தீர்ப்பு’ என்பதாகவே இருக்கிறது விவசாயிகளின் நிலைப்பாடு.